களக்காடு அருகேயுள்ள தேவநல்லூா் பெரியகுளத்தில் பழுதடைந்துள்ள மடையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவநல்லூா் பெரியகுளத்தின் மூலம் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளத்துக்கு பச்சையாற்றில் இருந்து தனிக் கால்வாய் மூலம் தண்ணீா் வருகிறது. அண்மையில் பெய்த மழையால் குளம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் குளத்தின் மேற்கு மடையில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் முன்வந்தனா். அப்போது, மடை பழுதடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் மடையிலிருந்து தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதிகாரிகளும் சில தினங்களுக்கு முன் நேரில் வந்து பாா்வையிட்டுச் சென்றுள்ளனா். இதுவரை பழுதடைந்த மடை சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும் மடையிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் கரைகள் சேதமடைந்த நிலையில், விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனா். பெருமழை பெய்தால் சேதமடைந்துவிடும். கால்வாயில் வரும் தண்ணீா் வீணாக வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் நிலையும் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மேற்கு மடையை சீரமைக்கவும், கால்வாய் கரையில் சேதமடைந்த பகுதியை நிரந்தரமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.