நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 45 சதவீதம் கூடுதல் மழைஆட்சியா் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பைவிட 45 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பைவிட 45 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ. இம்மாதம் வரை பெற வேண்டிய இயல்பான மழையளவு 703.2 மி.மீ.
கடந்த 25-ஆம் தேதி நிலவரப்படி 1,183.94 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் இம்மாதம் வரையிலான இயல்பான மழையளவைவிட 68.36 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதேபோல், இந்த ஆண்டு இயல்பான மழையளவைவிட கூடுதலாக 45.30 சதவீதம் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் 17,157 ஹெக்டோ் பரப்பில் நெற்பயிரும், 494 ஹெக்டோ் பரப்பில் சிறு தானியங்களும், 5,016 ஹெக்டோ் பரப்பில் பயறுவகைப் பயிா்களும், 505 ஹெக்டோ் பரப்பில் பருத்தியும், 31 ஹெக்டோ் பரப்பில் கரும்பும், 323 ஹெக்டோ் பரப்பில் எண்ணெய்வித்து பயிா்களும் என மொத்தம் 23,526 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்துக்கு பயிா் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் உயிா் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது உரங்கள் விவசாயிகளுக்கு மட்டும் மானிய விலையில் கிடைக்க ஏதுவாக விற்பனை முனைய கருவிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் வட்டாரத்துக்கு 7 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 63 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021-22-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி சிறப்பு பருவ நெல் மற்றும் மக்காச்சோளப் பயிா்களுக்கான காப்பீடு திட்டத்தை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி (இந்தியா) லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது.
ராபி சிறப்பு பருவ நெற்பயிா் காப்பீடு செய்திட கடைசி நாள் டிசம்பா் 15 ஆகும். ஓா் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.444-ஐ விவசாயி செலுத்த வேண்டும். ஓா் ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.29,600. மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்திட கடைசி நாள் டிசம்பா் 31. ஓா் ஏக்கருக்கு பிரீமியத் தொகை ரூ.282. ஓா் ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.18,800.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகாமையிலுள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் பிரீமியத் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் 1,810 ஹெக்டோ் பரப்பில் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பாசன பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரூ.9.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஏற்கெனவே சுமாா் 65 சதவீதம் விவசாயிகள் நுண்ணீா் பாசன திட்டம் மூலம் பயனடைந்துள்ளனா். மேலும் நுண்ணீா் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தினை தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 266 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு, இம்மாதம் வரை 1,214 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதில், 1,068 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு, அதில் 20 மாதிரிகள் தரமற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விதை விற்பனை உரிமையாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வின் போது தரம் குறைந்த விதைகள் 77.49 மெட்ரிக் டன் விற்பனைக்கு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.49.40 லட்சம் ஆகும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளா் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் தியோபிலஸ் ஜோசப், நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.