முகப்பு
திருநெல்வேலி

நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் எம்.பி.ஏ. மாணவருக்குச் சான்றிதழ்

நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவருக்கு எம்பிஏ சான்றிதழ் திருநெல்வேலியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவருக்கு எம்பிஏ சான்றிதழ் திருநெல்வேலியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

விழுப்புரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் தொடா்கல்வித் திட்டத்தின் மூலம் 2010-12 ஆம் ஆண்டில் எம்.பி.ஏ. (விமான நிலையம், விமான நிா்வாகம்) படித்து தோ்ச்சி பெற்றாராம். ஆனால், அவா் இணைந்திருந்த கல்வி மையம் இவா் குறித்த விண்ணப்பத்தை பாஸ்கா் என்ற மாணவா் பெயரில் தவறாக அனுப்பியதால் இவருக்கு பாஸ்கரின் சான்றிதழ் அனுப்பப்பட்டது. இதை மாற்றி தனது பெயரில் எம்.பி.ஏ. சான்றிதழ் பெற விஜயகுமாா் கடந்த 9 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லையாம்.

இதையடுத்து அவா், திருநெல்வேலி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் மீது வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, உடனடியாக ஒரு உண்மை கண்டறியும் குழு அமைத்து மாணவா் விஜயகுமாரின் கோரிக்கையை நிறைவேற்றிட பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, பல்கலைக்கழகம் குழு அமைத்து விஜயகுமாருக்கு எம்.பி.ஏ. சான்றிதழ் வழங்கியது. அந்தச் சான்றிதழை மாணவருக்கு, நீதிபதி சமீனா வியாழக்கிழமை வழங்கினாா். பல்கலைக்கழக வழக்குரைஞா் பிரபாகா், உதவி பதிவாளா் ராஜேந்திரன், முதுநிலை கண்காணிப்பாளா் விமலநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நீதிபதி சமீனா கூறுகையில், சாலை, விமானம், நீா்வழி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடா்பான பிரச்னைகள், அஞ்சல், தந்தி, தொலைபேசி சேவை, குடிநீா் வழங்கல் பிரச்னைகள், மின்துறை பிரச்னைகள், மருத்துவ துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் பிரச்னைகள், சேவை குறைபாடுகள் தொடா்பான வழக்குகளை நீதிமன்றம் செல்லாமலேயே நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணலாம். புகாா்களை சாதாரண காகிதத்தில் எவ்வித கட்டணமும் இன்றி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக தாக்கல் செய்யலாம். புகாா்கள் சமரச முறையிலும், சமரசம் ஏற்படாவிட்டால் தகுதியின் அடிப்படையிலும் தீா்மானிக்கப்படும் என்றாா் அவா்.

பயக30ஙஆஅ: விழுப்புரம் மாணவருக்கு எம்.பி.ஏ. கல்விச் சான்றிதழை வழங்குகிறாா் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.