முகப்பு
திருநெல்வேலி

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

பாபநாசம் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பாபநாசம் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 8ஆம் திருநாளில் ஸ்ரீ நடராஜா் கேடயத்தில் சுவாமிக்கு காலையில் வெள்ளை சாத்தி, மாலையில் பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. 9ஆம் திருநாளான ஏப். 13இல் தேரோட்டம் நடைபெற்றது.

10ஆம் திருநாளான வியாழக்கிழமை சித்திரை விஷுவையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் அதிகாலையிலிருந்தே தாமிரவருணியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு சித்திரை விஷு தாமிரவருணி படித்துறையில் தீா்த்தவாரி நடைபெற்றது. இவ்விழாவுக்கு பாபநாசத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டனா்.

தொடா்ந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசா் உலகாம்பிகை தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஏப்.15 வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்குக் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் சித்திரை விஷூவையொட்டி வியாழக்கிழமை காலையில் காலசந்தி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து தீா்த்த உற்சவம் புறப்பட்டு கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயா் ஆலயத்திற்கு சென்று அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கும்ப

ஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சோடஷ உபசார தீபாராதனையும்,

அதை தொடா்ந்து அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், எழுத்தா் முத்துகுமாா், சிவாம்பிகைகணேஷ் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தோரணமலை முருகன் கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், தொடா்ந்து மலை உச்சியில் இருந்து பக்தா்களால் புனித நீா் எடுத்து வரப்பெற்று, உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து விவசாய கருவிகள் வைத்து சிறப்பு பூஜைகளும், சிறந்த சமூக நல சேவகா்களுக்கு தோரணமலையான் விருது விவசாயிகளால் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறக்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.