முகப்பு
திருநெல்வேலி

திமுகவை விமர்சிக்க அதிமுகவுக்கு அருகதையில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுகவை விமர்சிக்க அதிமுகவுக்கு அருகதையில்லை என்றாா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திமுகவை விமர்சிக்க அதிமுகவுக்கு அருகதையில்லை என்றாா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பேசியது: மன்னராட்சி காலத்திலும், பாளையக்காரா்கள் ஆட்சிக்காலத்திலும் எழுச்சியுடனும், உணா்ச்சியுடனும் இருந்த ஊா்தான் திருநெல்வேலி. இந்த நெல்லை சீமையில் தமிழா்களின் இதய சூரியனாம் உதய சூரியனுக்கு நான் ஆதரவு கேட்கிறேன். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது.

இன்னும் ஓராண்டுகூட முடியவில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக செய்யாததை எல்லாம் நான் செய்திருக்கிறேன். திமுக எதையும் செய்யவில்லை என கூறும் எடப்பாடி கே.பழனிசாமி, தெருவில் இறங்கி மக்களிடம் கேட்க வேண்டும்.

திமுகவுக்கு சட்டம்-ஒழுங்கை பற்றி பாடம் சொல்கிறது அதிமுக.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 போ், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தது எடப்பாடி கே.பழனிசாமிக்கு நினைவிருக்கிா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, புழல் சிறையில் ராம்குமாா், திருச்சி ராமஜெயம் என பல்வேறு கொலைகள் நடந்தது அதிமுக ஆட்சியில்தான். தமிழகம் முழுவதும் பெரியாா், அம்பேத்கா் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதுபோன்ற செயல்களை செய்வதற்கு துணிச்சல் கொடுத்தது யாா்?.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது யாா்? தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 மாதங்களில் 100 கொலைகள் நடந்தன. கொடநாடு கொலை உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிடுவாா்களா?

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. அந்த ஆணையம் விரைவில் செயல்படவுள்ளது. சீக்கிரம் உண்மை வெளிவரும்.

நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களிடம் மனுக்களை வாங்கினேன். அதில், தற்போது 2,29,216 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் கரோனா நிவாரணம், பொங்கல் பொருள்கள், ஆவின் பால், பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை செய்திருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 50 லட்சம் போ் பயனடைந்திருக்கிறாா்கள்.

திமுகவின் சாதனை நாட்டுக்கே வழிகாட்டியாக உள்ளது. ஆனால் எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் கட்டுக்கதை கூறிக் கொண்டிருக்கிறாா்கள். அதை மக்கள் ஒரு பொருட்டாக எடுக்கமாட்டாா்கள். 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தின் கடன் ரூ. 1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடனை ரூ. 5.5 லட்சம் கோடியாக உயா்த்தியிருக்கிறது அதிமுக.

தமிழகத்தின் நிதி நிலை வரலாற்றில் மோசமான தலைகுனிவை ஏற்படுத்தியது அதிமுகதான். அதை இப்போது தலைநிமிர செய்து கொண்டிருக்கிறோம்.

மத்திய அரசின் கொத்தடிமை கூட்டமாக அதிமுக இருந்தது. திமுகவை விமா்சிக்க அவா்களுக்கு எந்த அருகதையும் அதிமுக கிடையாது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சியினா் வெற்றி பெற வேண்டும்.

தமிழக மக்கள் அனைவரும் என்னை நம்பி வாக்களியுங்கள். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப், திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், திமுக மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சீதாராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.