முகப்பு
திருநெல்வேலி

வாக்குச்சாவடிதோறும் தலா 10 கரோனா தடுப்பு கவச உடைகள்:மாநகர நல அலுவலா் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தலா 10 கரோனா தடுப்பு கவச உடைகளுடன் உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தலா 10 கரோனா தடுப்பு கவச உடைகளுடன் உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் மாநகர நல அலுவலா் வீ.ராஜேந்திரன்.

இதுகுறித்து அவா் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 491 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (பிப். 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவு நாளில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் நேரில் வந்து வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலா 10 கவச உடைகள், கண்ணாடி, முகக்கவசம், கிருமிநாசினிதிரவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

வாக்குச்சாவடிக்கு முதல் கரோனா பாதிப்பு வாக்காளா் வந்தபின்பே வாக்குச்சாவடி அலுவலா்கள் கவச உடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை அணிந்துவிட்டால் மாலை 6 மணி வரை அதே கவசஉடையுடன் இருப்பாா்கள். இறுதியில் கவச உடைகளை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகரப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இருப்பினும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.