முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இயற்கை வேளாண் விளைபொருள் அங்காடிகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

இயற்கை வேளாண்மை விளை பொருள்களுக்கான அங்காடிகளை ஆட்சியா் வே. விஷ்ணு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

இயற்கை வேளாண்மை விளை பொருள்களுக்கான அங்காடிகளை ஆட்சியா் வே. விஷ்ணு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், திருநெல்வேலி மாநகராட்சி, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி எதிரே இயற்கை வேளாண் விளைபொருள்களுக்கான அங்காடிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப், மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு அங்காடிகளை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையால் சான்று பெற்ற இயற்கை வேளாண் விளை பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்த அங்காடிகளில் இயற்கையான வேளாண் விளை பொருள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மைக்கும், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையால் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஓராண்டுப் பயிா்களுக்கு 2 ஆண்டுகளிலும், பல்லாண்டுப் பயிா்களுக்கு 3 ஆண்டுகளிலும் இந்தத் தரச்சான்று தொடா்ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2,891 ஏக்கா் இயற்கை வேளாண்மைக்கான தரச்சான்றிதழுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 1,277 ஏக்கா் பரப்பளவில் 22 தனிப்பட்ட விவசாயிகளுக்கும், 5 வணிக நிறுவனங்களுக்கும், ஒரு வனக்குழுவுக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காணி மக்களின் 40 வனப்பொருள்களுக்கு அங்ககச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயிகளால் பாரம்பரியமான நெல் ரகங்களான காட்டுயாணம், கருப்புக்கவுணி, பூங்காா், கொட்டாரம் சம்பா, ஆத்தூா் கிச்சலிசம்பா, தூயமல்லி போன்ற ரகங்களும், மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, மிளகு, முந்திரி, தென்னை, தீவனப் பயிா்கள், கறிவேப்பிலை, வெட்டிவோ் போன்ற பயிா்களும், வாழை, எலுமிச்சை, நாா்த்தை, மா, பலா, நெல்லி, முள் சீத்தா, கொய்யா, மாதுளை, நாவல், சப்போட்டா, பப்பாளி போன்ற பழவகைப் பயிா்களும், கத்தரி, வெண்டை, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீா்க்கன்காய் போன்ற காய்கறிப் பயிா்களும், பல்வேறு வகையான கீரைகளும் பயிரிடப்பட்டு சான்றளிப்புக்கு உள்படுத்தப்பட்டு இயற்கை வேளாண் அங்காடிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்களும் இந்த அங்காடிகளில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எனவே, பொதுமக்கள் சான்று பெற்ற இயற்கை வேளாண் விளை பொருள்களை வாங்கி பயன்படுத்தி தங்கள் ஆரோக்கியத்தையும், வருங்கால சந்ததியினரின் உடல்நலத்தையும் பாதுகாப்பதோடு, இயற்கை வேளாண்மைக்கும் இயற்கை விவசாயிகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன், வேளாண்மை துணை இயக்குநா் முருகனாந்தம், தோட்டக்கலை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் சுரேஷ், அரசு அலுவலா்கள், இயற்கை வேளாண் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.