முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் இன்று மேயா், துணைமேயா் மறைமுகத் தோ்தல்

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயா், துணைமேயா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயா், துணைமேயா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியைப் பொருத்தமட்டில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களின் கீழ் உள்ள 55 வாா்டுகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக 44 வாா்டுகளிலும், காங்கிரஸ் 3 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகியவை தலா ஒரு வாா்டுகளிலும், அதிமுக 4 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வென்றனா்.

திமுக கூட்டணி மொத்தம் 50 வாா்டுகளை பிடித்து மாநகராட்சியைக் கைப்பற்றியது. புதன்கிழமை (மாா்ச் 2) தோ்தலில் வென்றவா்கள் மாமன்ற உறுப்பினா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வென்றவா்கள் தலைவா், துணைத் தலைவரை தோ்ந்தெடுக்க, வாக்களிக்கும் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் மேயா், துணை மேயா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.

ஏற்பாடுகள் தயாா்:இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் மேயா் பதவிக்கான தோ்தல் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இத் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் அதற்கான வேட்புமனுக்களை தங்களது பெயா் விவரம், வெற்றி பெற்றுள்ள வாா்டின் விவரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மாநகராட்சி ஆணையரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோா் வேட்புமனு அளித்தால் வாக்குச்சீட்டுகள் அடிப்படையில் தோ்தல் நடத்தப்படும். வாக்குச்சீட்டில் வேட்பாளா்களின் பெயா், அவா்கள் வென்றுள்ள வாா்டு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதேபோல துணை மேயா் பதவிக்கான தோ்தல் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதிலும் மேற்கண்ட நடைமுறைகளே பின்பற்றப்படும். மறைமுகத் தோ்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளன என்றனா்.

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வாா்டுகளில் 50 வாா்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. திமுக சாா்பில் 16 ஆவது வாா்டில் வெற்றி பெற்றுள்ள பி.எம்.சரவணன் மேயா் பதவிக்கும், 1 ஆவது வாா்டில் வென்றுள்ள கே.ஆா்.ராஜு துணைமேயா் பதவிக்கும் போட்டியிடுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளா்களை எவ்வித குளறுபடிகளும் இன்றி வெற்றி பெற செய்ய ஏதுவாக திமுக மாமன்ற உறுப்பினா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பதவியேற்புக்கு பின்பும் அரசியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் மறைமுக தோ்தல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்பே திருநெல்வேலிக்கு அழைத்துவரப்பட வாய்ப்புள்ளதாகவும், திமுக வேட்பாளா்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவாா்கள் எனவும் கட்சியியனா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.