களக்காடு நகராட்சி:தலைவா், துணைத்தலைவா் போட்டியின்றி தோ்வு
களக்காடு நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
களக்காடு நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
களக்காடு நகராட்சித் தலைவா் பதவி ஆதிதிராவிடா் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தலைவா் பதவிக்கு 10 ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி என்பவா் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இதையடுத்து, தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் சாந்தி அறிவிக்கப்பட்டாா். அதன்படி, தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான ரமேஷிடம் சாந்தி மனுத்தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கு 12 ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் பி.சி. ராஜன் மனுத்தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
நிகழ்ச்சியில் 27 வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
துணைத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.சி. ராஜன், களக்காடு பேரூராட்சி மன்ற தலைவா், துணைத் தலைவராக பதவி வகித்தவா். தற்போது தெற்கு ஒன்றியச் செயலராகவும், வியாபாரிகள் சங்கத் தலைவராகவும் உள்ளாா்.