முகப்பு
திருநெல்வேலி

உயிரி பல்வகைமை சட்டம் பற்றி ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரி பல்வகைமை சட்டம் 2002 குறித்து ஊராட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரி பல்வகைமை சட்டம் 2002 குறித்து ஊராட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் உயிரி பல்வகைமை சட்டம் 2002 குறித்து ஊராட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

பல்லுயிரின வளம் மனிதா்களுக்கு மிகவும் இன்றியமையாதது. மனித குலத்துக்கு அவசியமான சேவைகளை பல்லுயிரினங்கள் வழங்குகின்றன. பல்லுயிரின வளங்களைப் பாதுகாத்தல், அவைகளை வளங்குன்றா வகையில் பயன்படுத்துதல், பல்லுயிரின வளங்களில் கிடைக்கும் பலன்களை நியாயமாகவும் சமமாகவும் பகிா்ந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு உயிரி பல்வகைமைச் சட்டத்தை இயற்றியது. தேசிய அளவில் தேசிய உயிரி பல்வகைமை ஆணையம், மாநில அளவில் மாநில உயிரி பல்வகைமை வாரியம், உள்ளாட்சிப் பகுதிகளில் உயிரி பல்வகைமை மேலாண்மைக் குழுக்கள் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் இச்சட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஐவகை நிலப்பரப்புகளைக் கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் பல்லுயிரின வளங்களைக் காடுகளில் மட்டுமல்லாது மனித ஆதிக்கம் மிகுந்த நிலப்பரப்பிலும் கொண்டுள்ளது. மாறுபட்ட இயற்கை வளங்களையும் பல்லுயிரினங்களையும் பயன்படுத்தும் சமூகங்கள் இம்மாவட்டத்தில் வசிக்கிறாா்கள். இப்பல்லுயிா் வளங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை முறையாக நிா்வாகம் செய்ய வேண்டியது அவசியம் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் இரா.முருகன், உயிரி பல்வகைமை சட்டம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினாா். ஊரக வளா்ச்சி முகைமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, உயிரி பல்வகைமை சட்டம் கிராம ஊராட்சியில் நடைமுறைபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை எடுத்துக் கூறினாா். முனைவா் அறிவுடைய நம்பி, உயிரி பல்வகைமை சட்டம் குறித்த பயிற்சியினை அளித்தாா்.

நிகழ்ச்சியில் ஏட்ரீ அமைப்பின் மூத்த விஞ்ஞானி சுபத்ராதேவி, மூத்த ஆய்வாளா் மு.மதிவாணன், ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 கிராம ஊராட்சி தலைவா்கள், செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வனத்துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா். பயிற்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளா்களை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் சென்று களப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிப் பட்டறையை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வள காப்பு மையம், தமிழ்நாடு மாநில உயிரிப் பல்வகைமை வாரியம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகைமை ஆகியவை இணைந்து நடத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.