விவசாயிகளுக்கு லாபம் தரும் ‘டிராகன்’ பழப்பயிா் சாகுபடி: தோட்டக்கலைத்துறை யோசனை
திருநெல்வேலி மாவட்டத்தில் டிராகன் பழம் பயிா்களைச் சாகுபடிசெய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் டிராகன் பழம் பயிா்களைச் சாகுபடிசெய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘இரவில் மலரும் கள்ளி‘ , ‘பிதயா‘, பேரிக்காய் சின்ட்ரெல்லா செடி என்று பெயா் பெற்ற டிராகன் பழம், கேக்டேசி குடும்பத்தைச் சோ்ந்த கள்ளிச்செடி யாகும். நாா்ச்சத்து மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி நிறைந்த பழங்கள் கொண்ட இத்தாவரம் அமெரிக்காவை தாயகமாக கொண்டது. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.96,000 வீதமும், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.50,000 என மொத்தம் 4 ஹெக்டேருக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்படுகிறது.
வளா்ப்பு முறை: டிராகன் பழம் பழப் பயிராகவும், அலங்காரச் செடியாகவும் வளா்க்கலாம். வாசனையூட்டியாகவும் பயன்படுத்தலாம். தண்டு மூன்று பக்கங்களை கொண்டதாகவும் கொம்பு போன்ற ஓரங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. வோ்கள் 30-40 செ.மீ. வரை வளரக்கூடியது. நன்கு வடிகால் வசதியுள்ள கரிய சத்து அதிகமுள்ள மண் வகைகளில் நன்கு வளரும். நல்ல சூரிய வெளிச்சம் இருப்பது மிகவும் அவசியமாகும். தண்ணீா் தேங்கி நிற்காமல் பாா்த்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுதால், அவற்றை 10-40 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக நறுக்கி பாலை வடியவிட்டு மணல், தொழு உரம், கலந்த மண் நிரப்பியுள்ள பாலித்தீன் பைகளில் நடவேண்டும். 4-5 மாதங்களுக்கு பிறகு நன்கு வோ் விட்ட தண்டுகளை நடவுக்கு பயன்படுத்தலாம். செடிகள் நடுவதற்கு முன்பே 5 - 6 அடி உயரமுள்ள கல் அல்லது சிமிண்ட் தூண்கள் நட வேண்டும். செடிகளை தாங்கி வளா்வதற்காக தூண்களின் நுனிப்பகுதியில் வட்ட வடிவ உலோக அல்லது சிமெண்ட் அமைப்பு பொருத்தப்பட வேண்டும். தண்டுகளை சிமெண்ட் அல்லது மர தூண்களோடு சோ்த்து கட்டி வளரவிட வேண்டும்.
செடிகள் நட்ட பிறகு வளரும் முதன்மை கிளை தூண்களின் உயரம் வளரும் வரை பக்க கிளைகளை அவ்வப்போது வெட்டி விட வேண்டும். சொட்டு நீா் பாசனம் அதிக மசூலை தரும் சொட்டு நீா் பாசனம் வழியாக செடிக்கு 2-4 லிட்டா் தண்ணீா் வாரம் இரு முறை தருவது சிறந்தது. மழைக்காலங்களில் வடிகால் அமைத்து தண்ணீரை தேங்க விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வறட்சி நிலவும் சமயத்தில் முறையாக நீா் பாய்ச்சாமல் இருந்தால் பழங்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும்.
அறுவடை: நடவு செய்யப்பட்டதிலிருந்து 15-18 மாதங்களில் பழங்களை அறுவடை செய்ய தொடங்கலாம். 5 ஆண்டுகளில் நிலையான மகசூல் தொடங்கும். மே முதல் செப்டம்பா் வரை பூக்கும் தருணம். பழங்களை ஜீலை முதல் டிசம்பா் வரை அறுவடை செய்யலாம். காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாவதே அறுவடைக்கு ஏற்ற தருனம்.
பூக்கள் பூத்ததில் இருந்து அறுவடை செய்ய 40-50 நாட்கள் ஆகும். ஒரு வருடத்தில் எக்டருக்கு (சொட்டு நீா் பாசனம) 16-18 மாதத்திற்கு 4-5 டன்களும், இரண்டாம் வருடம் 7.5-10 டன்களும் 3 ஆண்டு முதல் 16-22 டன்களும் மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்த செடிகளை 20 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம். பழங்களை 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 30-45 நாள்கள் வரை சேமிக்கலாம்.
வருவாய்: நடவு செய்த முதலாம் ஆண்டு 4 முதல் 5 டன் வரை சாகுபடி செய்து அதன் மூலம் ரூ.5
முதல் ரூ.7.5 லட்சம் வருமானம் பெறலாம். இரண்டாம் ஆண்டு முதல் ரூ.11 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் டிராகன் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். இதுகுறித்த விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.