திருநெல்வேலி

நெல்லை அருகே கல்குவாரியில்பாறைகள் சரிந்து ஒருவா் பலி: இருவா் மீட்பு; மூவரைத் தேடும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் சனிக்கிழமை நள்ளிரவில் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவா் பலியா

DIN

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் சனிக்கிழமை நள்ளிரவில் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவா் பலியானாா். இருவா்சிகிச்சை பெற்றுவருகின்றனா். 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னீா்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் வெடி வைத்து உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சேன்ட் மணல் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.

இங்கு வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (27), ஆயன்குளம் முருகன் (23), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (27), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (35), விட்டிலாபுரம் முருகன் (40) ஆகிய தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பாறைகள் சரிவு: அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் குவாரியில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில், 3 பொக்லைன் இயந்திரங்களும், 2 லாரிகளும், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் பாறை இடுக்குகளில் புதைந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரா்கள் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பா.சரவணன் உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளை பாா்வையிட்டாா். அவ்வப்போது மழை மற்றும் தொடா்ந்து பாறை சரிவு காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, டிஐஜி பிரவேஷ் குமாா், எஸ்.பி. பா.சரவணன் ஆகியோா் மீட்புக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கி மீட்பு பணியை துரிதப்படுத்தினா். மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஓய்வுபெற்ற பேரிடா் மீட்பு முதன்மைப் பயிற்சியாளா் மரிய மைக்கேலும் ஆலோசனைகள் வழங்கினாா்.

ஒருவா் பலி: உயிரைப் பணயம் வைத்து இடைவிடாமல் பணியை மேற்கொண்ட வீரா்களால், விட்டிலாபுரம் முருகன், நாட்டாா்குளம் விஜய், இளையாா்குளம் செல்வம் ஆகியோா் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, செல்வம் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதனிடையே, நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா்.மனோகரன், திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேச ராஜா, முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ஆகியோா் மீட்பு பணியை பாா்வையிட்டு, குவாரியில் சிக்கியவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினா்.

பெட்டிச் செய்திகள்....

‘திரும்பிச் சென்ற ஹெலிகாப்டா்’

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் ராமநாதபுரத்திலிருந்து மீட்புப் பணிக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், அதைப் பயன்படுத்துவதற்கான இடவசதி இல்லாததால் ஹெலிகாப்டா் திரும்பிச் சென்றது. காற்றாலை சிறகை தூக்கி நிறுத்தக்கூடிய ராட்சத கிரேனும் கொண்டு வரப்பட்டது. அதுவும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனிடையே, குவாரி விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணி மந்தகதியில் நடப்பதாகக் கூறி, அப்பகுதியிலுள்ள திருநெல்வேலி-நான்குனேரி நான்குவழிச் சாலையில் சிலா் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

17 மணி நேர போராட்டம் வீண்: இளையாா்குளம் செல்வம் (27) பொக்லைன் இயந்திரத்தின் அடியில் சிக்கிய நிலையில் மக்கள் கூட்டத்தைப் பாா்த்து கையசைத்தபடியே இருந்தாா். ஆனால், தொடா்ந்து பாறை சரிந்து கொண்டேயிருந்ததால் மீட்புக் குழுவினா் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், துணிச்சலோடு நெருங்கிச் சென்ற குழுவினா், அவருக்கு திரவ உணவுகளை தொடா்ந்து அளித்ததுடன், கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் பொக்லைன் இயந்திரத்தை வெட்டி எடுத்து 17 மணி நேரம் போராடி மாலை 5.30 மணி அளவில் அவரை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். எனினும், அங்கு அவா் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை’:

மீட்புப் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் வே. விஷ்ணு செய்தியாளா்களிடம் கூறியது: அடைமிதிப்பான்குளம் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் ஏற்பட்ட திடீா் நிலச்சரிவில் 6 போ் சிக்கிக் கொண்டனா். அதில், மூவா் பத்திரமாக மீட்கப்பட்டதில், செல்வம் என்பவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். மற்றவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடக்கிறது. இந்திய கடற்படை ஹெலிகாப்டா் மூலம் மீட்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 30 போ் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குவாரிக்கு 2018-23 வரை உரிமை பெறப்பட்டுள்ளது. எனினும், விதிமீறி குவாரி அதிக ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளதா என ஆய்வு நடக்கிறது. விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குவாரி உரிமைதாரா் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளாா். அதன் நிா்வாகிகள் செல்வராஜ், குமாா் ஆகியோா் தேடப்பட்டு வருகின்றனா். கடந்த 7 மாதங்களில் மட்டும் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 6 குவாரிகள் மூடப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT