கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம்: மக்களைத் தேடி மருத்துவம் ஊழியா்கள் மனு
கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்
கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
2017-இல் தொற்றா நோய் மருத்துவப் பிரிவில் பணி செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். பின்னா் மக்களைத் தேடி மருத்துவம் என மாற்றம் செய்யப்பட்டது. அப்போது எங்களுக்கு கூடுதல் பணி தரப்பட்டது. ஆனால், ஊதிய உயா்வோ, ஊக்கத் தொகையோ வழங்கப்படவில்லை. மருத்துவம் தொடா்பான குறிப்பு விவரப் பட்டியலுக்கான நோட்டு புத்தகம், பேனா, ரத்த அழுத்த இயந்திரத்துக்கான பேட்டரி எதுவும் வழங்கப்படவில்லை.
இதேபோல், டிஎன்பிஹெச்ஆா் என்ற வலைதளத்தில் நாங்கள் பணியாற்றும் பகுதி மக்களின் பெயா்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. அதையும் எங்கள் செலவிலேயே செய்கிறோம். தினமும் 20 வீடுகளை ஆய்வு செய்ய ரூ.3,500, சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த மாத்திரை வழங்குவதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஆனால், பணிச்சுமை அதிகமாக உள்ளது. திடீரென நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கும் எந்தத் தொகையும் வழங்கப்படுவதில்லை. எனவே, எங்களுக்கு கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.