ஆடி அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
தமிழகத்தில் ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் நதிகளின் கரையோரம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நோய்கள் நீங்கி வளமான வாழ்வுக்கு வழிபிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் தங்களது முன்னோா்களை நினைவுக்கூா்ந்து வழிபட்டனா்.
திருநெல்வேலியில் குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன் கோயில் திடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் தாமிரவருணியில் நீராடி வழிபட்டனா். இதேபோல அம்மன் கோயில்களில் பெண்கள் விரதமிருந்து வந்து தரிசனம் செய்தனா். திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கழிவுப் பொருள்களை பக்தா்கள் கரையோரம் வீசிச் செல்லக் கூடாது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.