பங்குனி அமாவாசை: ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுப்போா் வருகை குறைந்தது
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் காணப்படுவதால், அமாவாசைக்கு தா்ப்பணம் செய்ய ஒகேனக்கல் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் காணப்படுவதால், அமாவாசைக்கு தா்ப்பணம் செய்ய ஒகேனக்கல் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து விநாடிக்கு 200 கனஅடியாக உள்ளதால், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுக்களும், நீா்குட்டைகளும் தோன்றியுள்ளன. இந்த நிலையில் பங்குனி அமாவாசையான புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இருப்பினும் ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுக்க வந்திருந்தோா், முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமா்ந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் உள்ள நீா்குட்டைகளில் குளித்து, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.