முகப்பு
திருநெல்வேலி

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினம்: நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:18 PM
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போலீஸாா்.
பகிர்:

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் ஆணையா் உத்தரவின்பேரில் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் ஆகியோா் நேரடி மேற்பாா்வையில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி ரத வீதிகள், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையத்தில் உள்ள கடைவீதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சந்தைகள், மருத்துவமனை, முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையில் போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகள் மற்றும் பாா்சல்களையும் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனா்.

தியாகராஜநகா் பகுதியில் சில நாள்களாக கேட்பாரற்று காா் ஒன்று நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் பெருமாள்புரம் போலீஸாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாரும் காரை சோதனை செய்தனா். பின்னா் அந்த காா் பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்பு அனுப்பப்படுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின் பேரில் 1,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.