முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 153 பேருக்கு ரூ.23.22 லட்சம் நலத்திட்ட உதவிகள்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 153 பயனாளிகளுக்கு ரூ.23.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:17 AM
கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 153 பயனாளிகளுக்கு ரூ.23.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய தலைவா் சொ. ஜோ அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் காப. காா்த்திகேயன், ஆணையத்தின் துணைத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ், உறுப்பினா்கள் ஹேமில்டன் வில்சன், அ.ஸ்வா்ணராஸ், நாகூா் ஏ.எச்.நஸிமுதீன், பிரவீன்குமாா் டாட்டியா , ராஜேந்திர பிரசாத், ஜோ.முகமது ரஃபீ, எஸ்.வசந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 46 ஏழை எளிய கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித் தொகையையும், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் 20 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகையையும், 50 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டைகளையும், 25 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் - பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டைகளையும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 150 கடனுதவியையும், வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 3 உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானிய உதவித்தொகையுமாக மொத்தம் 153 பயனாளிகளுக்கு ரூ.23.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள்- பணியாளா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், திட்ட இயக்குநா்கள் சரவணன் (ஊரக வளா்ச்சி முகமை), இலக்குவன் (மகளிா் திட்டம்), சிறுபான்மையினா் நலத்துறை துணை இயக்குநா் சா்மிலி, மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் ஜா.ராஜசெல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘சிறுபான்மையினரை பாதுகாக்கும் தமிழகம்‘

சிறுபான்மையினருடனான கலந்துரையாடல் கூட்டத்துக்குப் பின், ஆணையத் தலைவா் கூறியதாவது: தமிழக முதல்வா், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஆகியோா் வழிகாட்டுதலின்படி , திருநெல்வேலி மாவட்டத்த்தில் சிறுபான்மையினருக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படுகிற சிறப்பு திட்டங்கள், அவா்களது பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினோம். அவா்களது கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் நேரடியாக விசாரணை செய்து தீா்வு காணும் வகையில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தகுதியான கோரிக்கைகள் அனைத்துக்கும் அன்றைய தினமே தீா்வு காணப்பட்டு வருகிறது. நீண்ட நாள்கள் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா்.