முகப்பு
திருநெல்வேலி

மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும்: அமைச்சா் கே.என். நேரு உறுதி

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக் அரசு செய்துதரும் என உறுதிபட தெரிவித்தாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:16 PM
பகிர்:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக் அரசு செய்துதரும் என உறுதிபட தெரிவித்தாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்குப் பாப்பான்குளம் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளஅடுக்குமாடிக் குடியிருப்பில் அமைச்சா் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி, வீட்டிற்கான சாவிகளை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களிடம் வழங்கினாா்.

தொடா்ந்து மாஞ்சோலை தொடக்கப்பள்ளியில் தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், முன்னாள் பேரவைத்தலைவா் இரா. ஆவுடையப்பன், களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம் துணை இயக்குநா் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவிசாா் ஆட்சியா் (பொ) அம்பிகா ஜெயின், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் காஜாகரிபூன்நவாஸ், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நீதிமன்ற உத்தரவுக்குள்பட்டு செய்து கொடுக்கப்படும், மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்துவதற்காக தமிழக முதல்வரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடுஅரசு மாஞ்சோலை பகுதி மக்களுக்கான 11 வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அப்பகுதி மக்களுக்கு கலைஞா் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.இங்கு வசித்த 4 தொழிலாளா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தெற்குப் பாம்பான்குளத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு ரெட்டியாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முழு மானியத்துடன் வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாஞ்சோலைப் பகுதி மக்கள் சமத்துவமாக வாழ்வதற்கு சமத்துவபுரம் போல் ஒரே இடத்தில் வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். அதை அனைவரும் விரும்பினால் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.