முகப்பு
திருநெல்வேலி

பிப். 20 - 27 புலிகள் கணக்கெடுப்புப் பணி: மாஞ்சோலை, காரையாறு செல்லத் தடை

Updated On : 18 பிப்ரவரி 2024, 4:40 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம், பிப். 17: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்டத்தில் இம்மாதம் 20 முதல் 27ஆம் தேதிவரை புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளதால் மாஞ்சோலை, காரையாறு பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்டப் பகுதியில் 2024ஆம் ஆண்டுக்கானபுலிகள் கணக்கெடுப்புப் பணிகள் இம்மாதம் 20முதல் 27ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. எனவே, அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்குள்பட்ட மணிமுத்தாறு, பாபநாசம் வனச் சோதனைச் சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. மேலும், அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச் சரகங்களின் வனப் பகுதிகளுக்குள் விதிகள்படி புலிகள் கணக்கெடுப்புக் காலங்களில் சூழல் சுற்றுலா, வழிபாடு, ஓய்வு விடுதிகள் முன்பதிவு போன்ற எந்தக் காரணங்களுக்காகவும் பொதுமக்களை அனுமதிக்க இயலாது என்பதால், மேற்குறிப்பிட்ட நாள்களில் அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.