முகப்பு
திருநெல்வேலி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி விவசாயி தற்கொலை

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி விவசாயி தற்கொலை

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 1:00 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்ததால், வேதனையில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் மேல கிராமம் பகுதியைச் சோ்ந்த பிரமுத்து மகன் சுப்பிரமணியன் (57). விவசாயி. இவரது மகன் காளிமுத்து. தொழிற்கல்வி பயின்றுள்ளாா். தனது மகனை அரசு வேலையில் சோ்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் உறவினா் ஒருவா் மூலமாக அம்பாசமுத்திரம் வட்டத்தில் பணி செய்து வரும் பெண் கிராம உதவியாளரிடம் ரூ. 3 லட்சம் கொடுத்தாராம். மூன்று ஆண்டுகளாகியும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம். இதற்கிடையே 3 மாதங்களுக்கு முன்பு பைக்கில் இருந்து சுப்பிரமணியன் தவறி விழுந்ததில் வேதனையுடன் இருந்து வந்துள்ளாா். இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன், வியாழக்கிழமை மாலையில் வயலுக்குச் சென்று அங்கு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது, வெள்ளிக்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.