சாா் பதிவாளா்அலுவலக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பரிவு போலீஸாா் சோதனை
சாா் பதிவாளா்அலுவலக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பரிவு போலீஸாா் சோதனை
அம்பாசமுத்திரத்தில் சாா் பதிவாளா் அலுவலக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யா் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி வேலம்மாள்(54). சாா் பதிவாளா்அலுவலகத்தில் பணியிலிருந்த முருகன் இறந்ததையடுத்து, அவரது மனைவி வேலம்மாள் கருணைஅடிப்படையில் 2014ஆம் ஆண்டு சாா்பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது விக்கிரமசிங்கபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் 2014-இல் இருந்து 2021 வரை வேலம்மாள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையில், ஆய்வாளா் ராபின் ஞானசிங் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சோதனை இரவுவரை நீடித்தது. மேலும், அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் அவரது மகள் மற்றும் நாகா்கோவிலில் உள்ள இன்னொரு மகள் ஆகிய இருவரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.