திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் நடந்து சென்ற தொழிலாளி வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக எழுந்த புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கீழத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்தீசன்(49). இவா் தனது வயிற்றில் ஏா்கன் குண்டு பாய்ந்ததாக திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் பிரியராஜ்குமாா் மற்றும் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று காா்த்தீசனிடம் விசாரணை செய்தனா்.
அப்போது, அவா் மன்னாா்புரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுட்டதில் தனது வயிற்றில் குண்டு பாய்ந்துவிட்டதாக தெரிவித்தாா்.
மேலும் துப்பாக்கியால் சுட்ட நபா்கள் குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறினாராம். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.