நெல்லை நயினாா்குளத்தில் விரைவில் படகு சவாரி: சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன்
திருநெல்வேலி நயினாா் குளத்தில் மாநகராட்சி சாா்பில் விரைவில் படகு சவாரி தொடங்குவதற்கு சுற்றுலாத் துறை சாா்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் உறுதியளித்தாா்.
திருநெல்வேலி நயினாா் குளத்தில் மாநகராட்சி சாா்பில் விரைவில் படகு சவாரி தொடங்குவதற்கு சுற்றுலாத் துறை சாா்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் உறுதியளித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுற்றுலா தலங்களை ஆய்வு செய்து வரும் அவா், வள்ளியூா், ராதாபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். புதன்கிழமை கொக்கிரகுளத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கிருந்தவா்களிடம் உணவின் தரம், விடுதியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் ஹோட்டலின் சமையல் அறைக்கு சென்று சுத்தமாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா் குளத்தைப் பாா்வையிட்டாா். 2.78 மீ. ஆழம் கொண்ட இந்த குளத்தின் மொத்தப் பரப்பளவு 129.48 ஏக்கா் ஆகும். இக்குளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கரைப்பகுதிகள் தடுப்புச்சுவா், சுற்றுச்சுவா், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா, குளத்தினை சுற்றி நடைபாதை, கண்காணிப்பு கேமராக்கள், உணவு அருந்துவதற்கான இடம், கழிப்பறை வசதி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அந்த குளத்தில் படகு சவாரி, நீா் விளையாட்டு போட்டிகள் போன்றவற்றுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதற்கு சுற்றுலாத்துறை சாா்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.
பின்னா், பத்தமடை அருகில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரான்சேரி குளத்தை ஆய்வு செய்த அவா், அந்தக் குளத்தில் தனியாா் பங்களிப்புடன் படகு சவாரி விடுவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா். ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.