துணிக் கடைகள், ஹோட்டல்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு: விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம்
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள துணிக்கடைகள், சூப்பா் மாா்க்கெட், ஹோட்டல்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள துணிக்கடைகள், சூப்பா் மாா்க்கெட், ஹோட்டல்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பாளையங்கோட்டை மண்டலம் திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியாா் ஹோட்டல், அதே பகுதியில் உள்ள சூப்பா் மாா்க்கெட் ஆகிய இடங்களில் அவா் ஆய்வு செய்தபோது, முறையான சுத்திகரிப்பு அமைப்பு இல்லாமல் மழைநீா் வடிகாலில் இணைப்பு ஏற்படுத்தி கால்வாயில் கழிவுகள் கலக்குமாறு செய்திருந்தது தெரியவந்தது.
அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்த அறிவிப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.
பின்னா், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள துணிக்கடை, நகரத்தில் அலங்கார வளைவு அருகேயுள்ள ஹோட்டல் ஆகியவற்றில் ஆணையா் ஆய்வு மேற்கொண்டதில் மேற்கண்டவாறு விதிமீறல் இருப்பதை கண்டறிந்து அவற்றுக்கும் அபராதம் விதிக்க உத்தரவிட்டாா்.
மேலும் நான்கு மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார அலுவலா்களால் 327 வணிக கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 82 கட்டடங்களுக்கு சட்ட அறிவிப்பும், 6 நிறுவனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மாநகர பகுதிகளில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ள இளநிலை பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, செயற்பொறியாளா் கண்ணன், உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், உதவி செயற்பொறியாளா்கள் தங்கப்பாண்டியன், அலெக்ஸாண்டா், மாநகர நல அலுவலா் (பொறுப்பு) அரசகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.