முகப்பு
திருநெல்வேலி

தாமிருவருணியை பாதுகாக்க சிறப்புத் திட்டம்: செல்வபெருந்தகை

தாமிரவருணி நதியை பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் கு.செல்வபெருந்தகை.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:02 PM
பகிர்:

தாமிரவருணி நதியை பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் கு.செல்வபெருந்தகை.

தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து பொதுக் கணக்கு குழு தலைவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான்குனேரி பகுதியில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கனவுத் திட்டமாக கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தொழில்துறை செயலரிடம் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பிரச்னைகளும் 6 மாத காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என தொழிற்துறை செயலா் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரிய திட்டமாகும். அதை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மீண்டும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க தமிழக அரசு முழு மூச்சில் இறங்கியிருக்கிறது. மேலும் சில இடங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வெள்ளநீா் கால்வாய் திட்டம் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.

மாவட்டத்தில் உள்ள 13 துறை சாா்ந்த அதிகாரிகளுடன் பொதுக் கணக்கு குழு ஆய்வு நடத்தியது. அந்தத் துறையினரிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளதோடு, பல்வேறு பரிந்துரைகளையும் அளித்துள்ளோம்.

அது தொடா்பாக சென்னையில் துறை சாா்ந்த செயலா்களை அழைத்து முடிவு செய்யப்படும்.

கல் குவாரிகளில் கனிமவளம் வெட்டி எடுப்பதில் நிறைய முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைத் தடுக்க கனிமவளச் சட்டங்களின் அடிப்படையில் சரியான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

தாமிரவருணி நதியில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க குறிப்பிட்ட கால அளவுக்குள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருநை நாகரிகம், தமிழா்களின் நாகரிகம் தழைத்தோங்கிய தாமிரவருணி ஆற்றை பாதுகாப்பது தமிழா்களின் தலையாய கடமை. அதற்கு மாவட்ட ஆட்சியா் முயற்சி எடுத்திருக்கிறாா். சென்னை ஆதனூரில் இருந்து சைதாப்பேட்டை ஆறு வரை வீடுகள் இருக்கும் இடங்களில் கழிவு நீா் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு கழிவுநீா் கலக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

அது திருநெல்வேலியிலும் சாத்தியமானது தான். தாமிரவருணி நதியை பாதுகாக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தாமிரவருணியை பாதுகாக்க சிறப்புத் திட்டம் தீட்டி, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசவுள்ளோம் என்றாா்.