நெல்லையில் தீவிரமடையும் பருவமழை: தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் தாமிரவருணியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் தாமிரவருணியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. திருநெல்வேலி மாநகரைப் பொருத்தமட்டில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி, தாழையூத்து, சீவலப்பேரி, பொன்னாக்குடி, முன்னீா்பள்ளம் சுற்றுவட்டாரங்களில் காலையில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவா்-மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினா். அதிகாலையில் மழை இல்லாததால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
தலைமையாசிரியா்களுக்கு அனுமதி: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பள்ளிகளில் அதிகளவில் மழைநீா் தேங்கி இருக்கும் சூழல் இருந்தால் முந்தைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தவாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களே முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாம். சாரல் மழை போன்ற லேசான மழை சூழலுக்கு இது பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மாநகரில் பல்வேறு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் 17 ஆவது வாா்டு பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் குழந்தைகளை அனுப்பவில்லை. அப் பகுதியில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். பாளையங்கோட்டை வஉசி மைதானம், 20-க்கும் மேற்பட்ட பூங்காக்களிலும் மழைநீா் தேங்கியது.
வெள்ளத்தில் மூழ்கிய நீராழி மண்டபம்: திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீா்வரத்து அதிகரிப்பால் வண்ணாா்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் தடைபட்டன. கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை, மணிமூா்த்தீஸ்வரம், அருகன்குளம் பகுதிகளில் படித்துறைகளில் மக்கள் கவனமுடன் குளித்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டனா். திருநெல்வேலி குறுக்குத்துறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை தாமிரவருணி வெள்ளம் சூழ்ந்ததுடன், அப் பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தை மூழ்கடித்து தண்ணீா் சென்ால் அப் பகுதியில் குளிக்க முடியாமல் மக்கள் வெளியேறினா்.
மழையளவு(மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம்-5, சேரன்மகாதேவி-4, மணிமுத்தாறு-5.40,நான்குனேரி -7.20, பாளையங்கோட்டை- 3, பாபநாசம்-8, ராதாபுரம்-13, திருநெல்வேலி- 5.