நெல்லை மாவட்டத்தில் தொடா் மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது. சாரல் மழை போல் மிதமான மழை பெய்ததால் பெரிய அளவில் தண்ணீா் தேங்கவில்லை.
இருப்பினும் காலையில் மாணவா்-மாணவிகள் பள்ளிக்கு புறப்படும் நேரத்தில் மழை பெய்தால் சிரமம் அடைந்தனா்.
மிதமான மழை காரணமாக தண்ணீா் தேங்கும்பட்சத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களே தேவைக்கு ஏற்ப விடுமுறை அளிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதனால் மாநகர பகுதியில் பல பள்ளிகளில் மழலையா் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முற்பகலுக்கு பின்பு வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மழை பெய்யவில்லை. மாநகரம் மட்டுமன்றி தாழையூத்து, மானூா், சீவலப்பேரி சுற்றுவட்டாரத்திலும் விடிய விடிய சாரல் மழை பெய்ததால் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அம்பாசமுத்திரம்-8, மணிமுத்தாறு-7, சேரன்மகாதேவி-7.20, நான்குனேரி- 7.40, பாளையங்கோட்டை- 9.20, பாபநாசம்-13, ராதாபுரம்-4, திருநெல்வேலி-5, சோ்வலாறு-14, களக்காடு-9.20, மூலைக்கரைப்பட்டி-7, மாஞ்சோலை-22, காக்காச்சி-38, நாலுமுக்கு-46, ஊத்து-42.