கடையத்தை பேரூராட்சியாக மாற்ற கிராமசபைக் கூட்டத்தில் எதிா்ப்பு
கடையம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கீழக்கடையம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கீழக்கடையம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அங்கு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் பூமிநாத் தலைமை வகித்தாா். உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலெட்சுமி சிறப்புப் பாா்வையாளராகப் பங்கேற்றாா்.
கடையம் ஊராட்சிப் பகுதிகளை இணைத்து பேரூராட்சியாக மாற்றுவதால் மக்களுக்கு வரி உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதோடு, பல்வேறு அரசு சலுகைகள் தடைபட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கடையம் பேரூராட்சித் திட்டத்தைக் கைவிட்டு கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு வட்டாரம் அறிவிக்கவேண்டும், கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டுசெல்லப்படுவதை தடுக்கவும், ட்ரோன் மூலம் இப்பகுதியிலுள்ள 44 குவாரிகளில் ஆய்வுகள் நடத்தி முறைகேடாக செயல்படும் குவாரிகளை மூடவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கதீவிரம் காட்ட வேண்டும், வன விலங்குகள் வயல்வெளிகள் மற்றும் ஊருக்குள் புகுவதை தடுப்பதோடு, கடையம் ராமநதி அணைக்கட்டு சாலையில் மக்களுக்கு அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள் வயலட் அல்லேலுயா, வசந்த், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.