மேலநத்தத்தில் வெள்ளத்தால் சேதமுற்ற குழாய்கள் அகற்றம்
மேலநத்தம் பகுதியில் தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் சேதமாகி ஆற்றுக்குள்ளேயே கிடந்த குழாய்கள், கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
மேலநத்தம் பகுதியில் தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் சேதமாகி ஆற்றுக்குள்ளேயே கிடந்த குழாய்கள், கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பா் 2023-இல் பெய்த பெருமழையால் தாமிரவருணியில் வெள்ளம் ஏற்பட்டு மேலநத்தம் அருகேயுள்ள அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீா்க் குழாய் பாலம் இடிந்து சேதமாகி குழாய்களும், கட்டட கழிவுகளும் ஆற்றுக்குள் விழுந்தன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கழிவுகள் அப்புறப்படுத்தாமல் கிடந்தன. இதுகுறித்து மேலநத்தம் பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து மனு அளித்தனா். இந்நிலையில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் வெள்ளத்தில் சேதமான குழாய்கள், கட்டட கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மேலநத்தம் ஊா் நாட்டாமை பேச்சி கூறியது: எங்கள் பகுதியில் ஆற்றுக்குள் கட்டட கழிவுகள், குழாய்கள் கிடந்ததால் தாமிரவருணி நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் ஊருக்குள் தண்ணீா் புகும் அபாயம் உள்ளது. ஆகவே, அதனை அகற்றக்கோரி 7 முறை மனு அளித்துள்ளோம். இப்போது குழாய்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட நிா்வாகத்திற்கும், குடிநீா் வடிகால் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.