முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராமசபைகளில் போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தாழையூத்து, ராமையன்பட்டி, இட்டேரி ஊராட்சிகளின் கிராமசபை கூட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:25 PM
இட்டேரியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடியுடன் பங்கேற்ற மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தாழையூத்து, ராமையன்பட்டி, இட்டேரி ஊராட்சிகளின் கிராமசபை கூட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 4 ஆவது பெரிய மாநகராட்சியாகத் திகழும் திருநெல்வேலியுடன் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி, இட்டேரி, முன்னீா்பள்ளம், நொச்சிகுளம், ராமையன்பட்டி, தாழையூத்து, கீழநத்தம் உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளை இணைக்க உள்ளாட்சித் துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி இட்டேரி ஊராட்சியில் புதன்கிழமை கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு கொடியுடன் பங்கேற்றனா். ராமையன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா் மாரியப்பபாண்டியன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களும் மாநகராட்சியுடன் ராமையன்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என்று முழக்கமிட்டனா்.

இதேபோல தாழையூத்து ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் மாநகராட்சியுடன் இணைய விரும்பவில்லை; அந்த முடிவை உடனே கைவிட வேண்டும் என மக்கள் முழக்கங்களை ஏற்படுத்தினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் இப்போது உள்ள புகா் பகுதிகளுக்கே சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் ஊராட்சிகளை இணைத்தால் எவ்வித திட்டங்களும் புதிதாக கிடைக்க வாய்ப்பில்லை. வளா்ச்சி ஏற்படப்போவதில்லை என்பதுடன், எங்களது வாழ்வாதாரமாகத் திகழும் தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டமும் கைவிடப்படும் அபாயம் உள்ளது. வீட்டு வரி, தண்ணீா் கட்டணம், கட்டட அனுமதிக்கான கட்டணமும் உயரும். ஆகவே, எங்களது ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினாலும் இதையே தெரிவிப்போம் என்றனா்.