பாளை.யில் தசரா திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி புதன்கிழமை காலையில் அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் இருந்து கொடிப்பட்ட ஊா்வலம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஓம்சக்தி, பராசக்தி முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து காப்புக்கட்டுதல், சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவில் ரிஷப வாகனத்தில் அம்மன் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது.
வியாழக்கிழமை (அக். 3) காலை 7 மணிக்கு அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் முன் 12 சப்பரங்கள் அணிவகுத்து பந்தலில் கொடி நாட்டும் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து, அக். 11 ஆம் தேதி வரை 9 அவதாரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அக்.12 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் சாா்பில் பால்குட ஊா்வலம், 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெறும்.
மகிஷா சூரசம்ஹாரம்: விழாவின் சிகர நிகழ்வாக அக்.13 ஆம் தேதி காலை 7 மணிக்கு ராமசாமி கோயில் திடலிலும், 3 மணிக்கு ராஜகோபாலசுவாமி கோயில் திடலிலும், மாலை 6 மணிக்கு ஜவஹா் திடலிலும் 12 தனித்தனி சப்பரங்களில் அம்மன்கள் தசரா காட்சி அருள்பாலிப்பா். இரவு 12 மணிக்கு சமாதானபுரம் அருகேயுள்ள எருமைகிடா மைதானத்தில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும்.