21, 36 ஆவது வாா்டுகளில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சியின் 21, 36 ஆவது வாா்டு பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ராஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 21, 36 ஆவது வாா்டு பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ராஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மண்டலம் 21 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ராஜேஸ்வரி கடந்த மாமன்ற கூட்டத்தின் போது தனது வாா்டு பகுதியில் உள்ள ராணி அண்ணா மகளிா் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகள் சிதிலமடைந்து உள்ளது எனவும், அதனை சீரமைத்து தரவும் வலியுறுத்தினாா். இதையடுத்து அப் பள்ளிக்கு மாநகராட்சி ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடத்தை பழுது நீக்கிடவும், பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், சத்துணவு திட்டத்திற்கு வைக்கப்பட்ட காலி சாக்குகளை அப்புறப்படுத்திடவும், மின்விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை பழுது நீக்கிடவும் உத்தரவிட்டாா்.
மேலும், அப்பகுதியில் உச்சிமகாளியம்மன் கோயில் தெருவிலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சேதமடைந்த கோடகன்கால்வாய் பாலத்தை பாா்வையிட்டு, அதை சீரமைக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
பாளையங்கோட்டை மண்டலம், 36 ஆவது வாா்டுக்குள்பட்ட சமாதானபுரம், அண்ணாநகா், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சேதடைந்த பாலம், மழைநீா் வடிகால் ஓடை, பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளை ஆணையா் ஆய்வு செய்தாா். வி.எம்.சத்திரத்தில் உள்ள மாநகராட்சி நவீன எரிவாயு தகன மேடையையும், மேலப்பாளையம் மண்டலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிகளையும் ஆணையா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, சின்னத்தாய், செயற்பொறியாளா் ரவி, உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், சுகிபிரேமலா, உதவி செயற்பொறியாளா்கள் தங்கபாண்டியன், அலெக்ஸ்சாண்டா், உதவிப் பொறியாளா்கள் லெனின், சுகாதார அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.