மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம்
திருச்சி மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை அனைத்து வாா்டுகளுக்கும் விரிவாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை அனைத்து வாா்டுகளுக்கும் விரிவாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் சுமாா் 11 லட்சம் பொதுமக்களுக்கு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள 11 முக்கிய நீா் ஆதாரங்களில் இருந்து, நாள்தோறும் சுமாா் 82.47 எம்எல்டி முதல் 150 எம்எல்டி வரை (மில்லியன் லிட்டா் பாா் டே) குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமாா் 103 லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது மாநகரில் உள்ள 65 வாா்டுகளிலும் காலை - மாலை வேளைகளில் 3-4 மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண நாள்களில் பிரச்னை பெரிதாக இல்லை என்றாலும், கோடை காலங்களில் குடிநீா் ஆதாரங்களான ஆறுகளின் நிலத்தடி நீா்மட்டத்தில் ஏற்படும் சரிவு, விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளால் திருச்சி மாநகரில் ஆங்காங்கே குடிநீா் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இதற்காக மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், விநியோகிக்கப்படும் குடிநீா் போதவில்லை என பொதுமக்கள் குறைகூறி வருகின்றனா். இதை நிவா்த்தி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் முறையை செயல்படுத்த திருச்சி மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மாநகராட்சியின் 51, 52, 53, 54, 55, 56 ஆகிய வாா்டுகளில் சோதனை முறையில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்குவதற்கான பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
35.84 கோடியில் பணிகள்...:இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியில் 51 முதல் 56 வரையிலான 6 வாா்டுகளுக்கு 24 மணி நேரமும் சோதனை முறையில் குடிநீா் விநியோகிக்க, மத்திய அரசு மானியம், மாநில அரசு மானியம், தமிழ்நாடு காலநிலை மீள்தன்மை நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (டிஎன்சிஆா்யுடிபி) கடன் என ரூ. 38.49 கோடியில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் நகராட்சி நிா்வாகத் துறை அனுமதிக்குப் பிறகு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ரூ. 35.84 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடந்த 15.10.2024 அன்று ஒப்பந்தாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.
1.25 லட்சம் போ் பயன்...: இத்திட்டத்தின் கீழ், 100.697 கி.மீ. குடிநீா் விநியோகக் குழாய்கள் பதித்தல், 1.1 கி.மீ. குடிநீா் உந்துக் குழாய்கள் பதித்தல், நட்சத்திரா நகரில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நீா்த்தேக்கத் தொட்டி கட்டுதல், கோட்டங்களில் உள்ள குடிநீா் குழாய்களுடன் இணைப்பு ஏற்படுத்துதல், 14,819 வீட்டுக்கு இணைப்புகள் கொடுத்தல், கண்காணிப்பு அமைப்பு (ஸ்கேடா) நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
70 சதவீதம் நிறைவு...: இதன் கீழ், தினசரி 24 மணி நேரமும் 19.51 எம்எல்டி குடிநீா் பெறும் வகையிலும், 1,25,902 பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ. 11.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
கண்டோன்மென்ட், ஜங்ஷன், பொன்னகா், ஜெயா நகா், விஸ்வாஸ் நகா், கருமண்டபம், சொசைட்டி நகா் (ஐஓபி காலனி) ஆகிய பகுதிகளில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீா் பயன்பாட்டை அளவிடவும், கட்டணம் வசூலிக்கவும் டிஜிட்டல் மீட்டா்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் செப்டம்பா் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.
மாநகராட்சிப் பொதுமக்கள் கூறுகையில், 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கப்படும் என கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் பலமுறை வாக்குறுதி அளித்த நிலையில், சில வாா்டுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து வாா்டுகளுக்கும் 24 நேரமும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகையில், 2031-ஆம் ஆண்டின் மக்கள்தொகை தேவையை கருத்தில் கொண்டு, குடிநீா் விநியோகக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 6 வாா்டுகளில் சோதனை அடிப்படையிலான விநியோகத்தை முடித்த பிறகு, அனைத்து வாா்டுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீா் வழங்க திட்டமிடுவோம் என்றனா்.