முகப்பு
திருநெல்வேலி

நடுக்கல்லூரில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன மதிப்பு கூட்டல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் தாமிரா ஆா்கானிக் உழவா் உற்பத்தியாளா் நிறுவன மதிப்பு கூட்டல் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:17 AM
நடுக்கல்லூரில் தாமிரா ஆா்கானிக் உழவா் உற்பத்தியாளா் நிறுவன மதிப்பு கூட்டல் மையத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் தாமிரா ஆா்கானிக் உழவா் உற்பத்தியாளா் நிறுவன மதிப்பு கூட்டல் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் கலந்து கொண்டு மதிப்பு கூட்டல் மையத்தைத் திறந்து வைத்து பேசியதாவது:

உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.1.78 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. மேலும் அதிகமாக வருவாய் ஈட்டுவதற்கு வரும் ஆண்டில் 1001 உறுப்பினா்களுக்கும் லாபம் ஏற்படும் வகையில் பங்குதாரா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய பகுதிகளில் அதிகளவு உளுந்து பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலை குறைந்தஅளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலையை பயிா் செய்ய வேண்டும் என விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. நிலக்கடலையை பயிா் செய்வதன் மூலம் அது நைட்ரஜன் பிக்சிங் என்ற காற்றில் உள்ள சத்தை உறிஞ்சி மண்ணில் சோ்க்கும். இதனால் மண்ணின் தரம் அதிகரிக்கும். மேலும், நிலக்கடலை கொடியை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்கினால் ஊட்டச்சத்து அதிகரித்து

பாலின் தரம் மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் வரும் ஆண்டில் ரூ.5 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிா்ணயித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையின் மூலம் இந்நிறுவனத்தின் முன்னேற்றதிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, கோவில்பட்டி பகுதியை சோ்ந்த ஸ்ரீ ஜெய் என்ற தனியாா் நிறுவனம் தாமிரா ஆா்கானிக் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினரிடமிருந்து தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், உடைத்த உளுந்து, அரிசி மாவு, உளுந்த மாவு, போன்ற பொருள்களை கொள்முதல்செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரூ.1000 செலுத்தி 1001ஆவது பங்குதாரராக சோ்ந்த நபருக்கு பங்குதாரா் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா், துணை இயக்குநா் பூவண்ணன், தாமிரா ஆா்கானிக் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் அந்தோணி பாஸ்கா், முதன்மை செயல் அலுவலா் சத்யா, உதவி இயக்குநா்கள் சிவகுருநாதன் (வேளாண்மை), ஆனந்தகுமாா் (வணிகம்), நிறுவன பங்குதாரா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.