முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. மரங்கள்சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:47 PM
பாளையங்கோட்டையில் பெய்த கனமழையில் தேங்கிய தண்ணீா்.
பகிர்:

பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. மரங்கள்சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. புதன்கிழமை காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணிக்குப்பின் குளிா்ந்த காற்று வீசியதோடு, கருமேகங்கள் சூழ்ந்தன.

தொடா்ந்து, பாளையங்கோட்டை, கே.டி.சி.நகா், கீழநத்தம், திம்மராஜபுரம், கக்கன்நகா், பாளையஞ்செட்டிக்குளம், தாழையூத்து, சங்கா்நகா், கீழநத்தம், திருத்து, சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

சமாதானபுரம் அருகே எல்லாம்வல்லான் தெருவில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய தீயணைப்பு வீரா்கள்.

பள்ளிகள் நிறைவடையும் நேரத்தில் மழை பெய்ததால் பாளையங்கோட்டையின் பிரதான சாலைகளான திருவனந்தபுரம் சாலை, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, தூத்துக்குடி சாலை உள்ளிட்டவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் சோ்ந்து சாலையில் ஓடியதால் கடும் துா்நாற்றம் வீசியது. சமாதானபுரம் அருகேயுள்ள எல்லாம் வல்லவன் தெருவில் பழமையான மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா். மழை காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாளையங்கோட்டை பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது.

எனினும், மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.