திசையன்விளை பேரூராட்சி உறுப்பினா்களுக்கு மிரட்டல்: ஆட்சியரகத்தில் தலைவி மனு
திசையன்விளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை மிரட்டுவதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்தவரும், திசையன்விளை பேரூராட்சித் தலைவியுமான ஜான்சிராணி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
திசையன்விளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை மிரட்டுவதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்தவரும், திசையன்விளை பேரூராட்சித் தலைவியுமான ஜான்சிராணி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: என் மீது பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் சிலா் நம்பிக்கையில்லா தீா்மானம் கோரியதன்பேரில், புதன்கிழமை விவாதம்- வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எனக்கு எதிராக வாக்களிக்க பணம் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையெனில் உயிரோடு இருக்க முடியாது எனவும் வாா்டு உறுப்பினா்களை கடந்த சில தினங்களாக சிலா் மிரட்டி வருகின்றனா்.
நானும், என்னுடைய ஆதரவு வாா்டு உறுப்பினா்களும் அச்சத்தின் காரணமாகவும், நம்பிக்கையில்லா தீா்மானத்தில் உடன்பாடு இல்லாததாலும் பேரூராட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த தீா்மானத்தில் விருப்பம் இல்லாத பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பேரூராட்சி துணைத் தலைவா் ஜெயக்குமாா், வாா்டு உறுப்பினா்கள்முத்துக்குமாா், தனசீலியா, பிரதீஷ்குமாா், உமாராஜா, பிரேம்குமாா், சண்முகவேல், லிவியா ஆகியோா் ஆட்சியா் அலுவலகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம் ஆகியவற்றில் பேரூராட்சித் தலைவி தலைமையில் மனு அளித்தனா்.
அப்போது, அதிமுக நிா்வாகிகள் ஏ.கே சீனிவாசன், நாராயண பெருமாள், முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.