அம்பையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வன உயிரினக் காப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணை வன அலுவலா் குணசீலி, வனச்சரகா்கள் அம்பாசமுத்திரம் நித்யா, பாபநாசம் குணசீலன், அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் கற்பக விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்ற முறையை நீக்க வேண்டும். பாபநாசம் மலையடிவாரப் புதா்களிலிருந்து திருநெல்வேலி நகரம் வரை நடமாட்டம் உள்ள காட்டுப் பன்றியை வனவிலங்குப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மலையடிவார கிராமங்களில் கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குரங்குகள் அட்டகாசத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.
மேலும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநா், மின்வாரிய அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கொன்று தொடா்புடைய நிலையில் அந்தத் துறை அதிகாரிகள் இல்லாமல் குறைதீா் கூட்டம் நடத்துவதில் பலனில்லை. எனவே அடுத்த கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்தில், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சொரிமுத்து, பெருங்கால் மதகு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் பாபநாசம், சிங்கம்பட்டி வைகோ குமாா், மற்றும் மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, திருப்பதியாபுரம், செட்டிமேடு பகுதி விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.