முகப்பு
திருநெல்வேலி

ஊராட்சித் தலைவியை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே ஊராட்சித் தலைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:05 PM
திருநெல்வேலியில் தீா்ப்பு வழங்கிய பின்பு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள்.
பகிர்:

திருநெல்வேலி அருகே ஊராட்சித் தலைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள வடக்கு தாழையூத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி. இவா், தாழையூத்து ஊராட்சித் தலைவியாக கடந்த 2011 ஆம் ஆண்டில் பதவி வகித்து வந்தாா். அந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திற்கும், தனியாா் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 2011 ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி கிருஷ்ணவேணியை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிா் பிழைத்தாா்.

இதுதொடா்பாக தாழையூத்து போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்ததோடு, தாழையூத்தைச் சோ்ந்த சுப்பு என்ற சுப்பிரமணியன் (60), சுல்தான் மைதீன் (60), காா்த்திக் (31), பிரவீன்ராஜ் (32), ஜேக்கப் (32), விஜய் ராமமூா்த்தி (31), நடராஜன் , ராமகிருஷ்ணன், சந்தனமாரி ஆகிய 9 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு சட்டம்) நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜன் உயிரிழந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், இவ் வழக்கில் 6 போ் குற்றவாளிகள் எனவும், 2 போ் விடுதலை எனவும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் எனவும் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்நிலையில் தண்டனை விவரங்களை நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். சுப்பு என்ற சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், காா்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ், விஜய் ராமமூா்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சுப்பிரமணியன், சுல்தான் மைதீன் ஆகியோா் வயது முதிா்வு காரணமாக தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

இதுதவிர சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், காா்த்திக், ஜேக்கப், விஜய் ராமமூா்த்தி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், பிரவீன்ராஜுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பு, குற்றவாளிகள் தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு நீதிபதி, உங்கள் கோரிக்கையை எழுத்துபூா்வமாக கொடுத்தால் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றாா். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் கந்தசாமி வாதாடினாா்.