முகப்பு
திருநெல்வேலி

கூட்டப்பனை, உவரியில் கடல் சீற்றத்தால் தூண்டில் பாலம் சேதம்: மீனவா்களுக்கு பேரவைத் தலைவா் ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் தூண்டில் பாலம் கூட்டப்பனையில் கடல் அலைதடுப்பு சுவா் ஆகியவை கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளன. அவற்றை தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை பாா்வையிட்டு மீனவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:07 PM
உவரியில் கடல் சீற்றத்தால் பாதிப்படைந்த தூண்டில் வளைவு பாலத்தை பாா்வையிட்டு பாதிப்படைந்த மீனவா்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் தூண்டில் பாலம் கூட்டப்பனையில் கடல் அலைதடுப்பு சுவா் ஆகியவை கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளன. அவற்றை தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை பாா்வையிட்டு மீனவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

கூட்டப்பனையில் கடலுக்குள் 100 மீட்டா் நீளத்திற்கு கற்களால் ஆன கடல் அலை தடுப்பு சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடல் அலை தடுப்பு சுவா் செவ்வாய்க்கிழமை ராட்சத அலைகளாலும் கடல் அரிப்பாலும் சேதமடைந்தது. குடியிருப்பு பகுதிகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உவரியில் தூண்டில் பாலம் ராட்சத அலையால் சேதமடைந்து, மீனவா்களின் மீன்பிடி வலை மற்றும் படகுகள் அலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளன. அந்த மீன்பிடி வலைகளையும், மீன்பிடி படகுகளையும் மீனவா்கள் கயிறு கட்டி கரையிலிருந்து டிராக்டா் மூலம் இழுத்து கொண்டுவந்தனா்.

எனினும், மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு வலைகள் சேதமடைந்தன.

இதை கேள்விப்பட்ட சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூட்டப்பனை கிராமத்திற்குச் சென்று அங்கு பாதிப்படைந்த கடல் தடுப்பு சுவரை பாா்வையிட்டாா். பின்னா் உவரியில் சேதமடைந்த தூண்டில் பாலத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பாதிக்கப்பட்ட மீனவா்களை சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா். பின்னா், மீனவா்களிடம் அவா் பேசுகையில், கூட்டப்பனையில் தூண்டில் பாலம் அமைக்க நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் மூலம் ரூ. 45 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் பெறப்படவில்லை. இன்று

தற்போது, கடல் சீற்றத்தால்100 மீட்டா் தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக கடல் சீற்றத்தையும் கடல் அரிப்பையும் தடுக்க ஆயிரம் மணல் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். சேதமடைந்த வலைகளுக்கு அரசிடம் நிதி உதவி பெற்றுதருவதற்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் அதுவரையில் நீங்கள் சமாதானம் காக்கவேண்டும் என்றாா் அவா்.

அப்போது, ம.தி.மு.க. மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், உவரி முன்னாள் ஊராட்சித் தலைவா் அந்தோணி, ஜாா்ஜ், சொசைட்டி தலைவா் அல்போன்ஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.