சான்று பெறாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் துறை எச்சரிக்கை
பிசான பருவத்தில் சான்று பெறாத நெல் விதைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.
பிசான பருவத்தில் சான்று பெறாத நெல் விதைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் சான்றட்டைபொருத்தப்பட்ட நெல் விதைகளை வாங்கும்போது அட்டையில் குறிப்பிடப்பட்ட நெல் ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களைசரிபாா்த்து உறுதிசெய்த பிறகு விற்பனை பட்டியல் பெற்று விதைகள் வாங்கிட வேண்டும். பிபிடி 5204 (கா்நாடகப் பொன்னி), ஜேஜிஎல் 1798 (ஆந்திரா பொன்னி), ஆா்என்ஆா் 15048 ஆகிய நெல் ரகங்கள் வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநில விதைகளுக்கு விதை விற்பனையாளா்கள் அந்தந்த மாநில விதைச்சான்றுத் துறையால் வழங்கப்படும் படிவம் 2 பெறப்பட்டபின்னரே விற்பனை செய்திட வேண்டும்.
மேலும், தனியாா் நெல் ரக உண்மை நிலை விதைகள் 10 கிலோ அல்லது 12 கிலோ பைகளில் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் ரகங்களுக்கு பதிவுறு சான்று மற்றும் முளைப்புத் திறன் சான்று பெறப்பட்டபின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.
வெளி மாநில விதைகள் மற்றும் தனியாா் நெல் ரக விதைகள் வாங்கும் விவசாயிகள் மேற்படி ரகங்கள் தங்கள் பகுதிக்கு ஏற்றவையா? பிசான பருவத்திற்கு ஏற்ற ரகமா? சான்றட்டை அல்லது உண்மை நிலை அட்டையில் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியா? என்பதை சரிபாா்த்து வாங்க வேண்டும்.
இந்தவிதிமுறை மீதி விதைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்கீழ் விதை உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூா்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.