முகப்பு
தஞ்சாவூர்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் அவதி

ஆள் பற்றாக்குறை காரணமாகவும், விஏஓவின் அடங்கல் சான்று கிடைக்காததாலும் விவசாயிகள் நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:09 PM
ஆள் பற்றாக்குறை காரணமாகவும், விஏஓவின் அடங்கல் சான்று கிடைக்காததாலும் விவசாயிகள் நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக நேரடி கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மறுபுறம் விஏஓவின் அடங்கல் சான்று கிடைக்காததாலும் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

மாவட்டத்தில் நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் கிட்டத்தட்ட 3.24 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மாவட்டத்தில் 600-க்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் சான்று, கணினி சிட்டா பெற்று, கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தரிடம் கொடுக்க வேண்டும். அதைப் பட்டியல் எழுத்தா் சரிபாா்த்து விஏஓவிடமிருந்து இணையவழி மூலம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் பின்னரே கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்க முடியும். ஆனால், சில நாள்களாக விஏஓக்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகளுக்கு அடங்கல் சான்று கிடைப்பதில்லை.

இதனால் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலைய வளாகத்திலும், வெளியிலும் கொட்டி வைத்து விற்க முடியாமல் தவிக்கின்றனா். இதனிடையே, விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக அடங்கல் சான்று மட்டும் தருமாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விஏஓ சங்க நிா்வாகிகளிடம் மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியது. என்றாலும், நடைமுறையில் பல கிராமங்களில் அடங்கல் சான்று கிடைக்காத நிலை வெள்ளிக்கிழமை தொடா்ந்ததால், விவசாயிகளால் நெல்லை விற்க முடியவில்லை.

ஒரு வாரமாக லாரிகள் வரவில்லை: இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு ஏற்றி அனுப்புவதற்கான லாரிகள் வரவில்லை. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அம்மாபேட்டை வட்டாரத் தலைவா் அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ் தெரிவித்தது:

அன்னப்பன்பேட்டை, பொந்தியாகுளம் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்வதற்கான லாரிகள் ஒரு வாரமாகவே வரவில்லை. இதனால், அன்னப்பன்பேட்டையில் ஏறத்தாழ 15 ஆயிரம் மூட்டைகளும், பொந்தியாகுளத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் மூட்டைகளும் தேங்கிக் கிடக்கின்றன. இதனிடையே, விஏஓ வேலைநிறுத்தம் காரணமாக அடங்கல் சான்று கிடைக்காததால் விவசாயிகளும் நெல்லை விற்க முடியவில்லை. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து ஒரு வாரமாகக் காத்துக் கிடக்கின்றனா் என்றாா் செல்வராஜ்.

ஆனால், நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு லாரிகள் பற்றாக்குறை காரணமல்ல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா். சேமிப்புக் கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், லாரிகளிலிருந்து நெல் மூட்டைகளை இறக்குவதற்கு கால தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. இதனால், கிடங்குகளுக்கு நெல் மூட்டைகளுடன் செல்லும் லாரியிலிருந்து மூட்டைகளை இறக்குவதற்கு 2 முதல் 3 நாள்களாகின்றன. இதன் காரணமாக கிடங்குகளில் லாரிகள் வரிசையாக நிற்கின்றன.

வெளிமாநில தொழிலாளா்களை வரவழைக்க முயற்சி: இதுகுறித்து அலுவலா்கள் மேலும் கூறுகையில், சேமிப்பு கிடங்குகளில் 30 சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்ள நிலையில், தற்போது 50 போ் தேவைப்படுகின்றனா். ஆனால், சுமை தூக்கும் பணிக்கு தற்காலிக தொழிலாளா்கள் கிடைக்கவில்லை. என்றாலும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளா்களை வரவழைப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

மேலும், தற்போது அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுவதால், மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்களுக்கு நாள்தோறும் ஏறத்தாழ 15 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகின்றன. இதில், ஏறக்குறைய 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படுகின்றன என்றனா் அவா்கள்.

இந்நிலையில், அவ்வப்போது மழை எச்சரிக்கை விடுக்கப்படுவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை இயக்கத்தை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்றும், விஏஓவின் அடங்கல் சான்று விவசாயிகளுக்கு கிடைப்பதற்கோ அல்லது அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாட்டையே மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →