மழை காலங்களில் மின் விபத்தை தவிா்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்
மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிா்த்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரைகளை மின்வாரியம் வழங்கியுள்ளது.
மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிா்த்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரைகளை மின்வாரியம் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பகிா்மானம்) செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மின்விபத்துகள் நிகழாமல் தடுக்க மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்பகிா்வு பெட்டிகள் அருகே தண்ணீா் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லாமல் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, தொடுவதற்கு முயற்சிப்பதோ கூடாது.
இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புக வேண்டாம். கான்கிரீட் கூரையாலான கட்டடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லது தாழ்வான பகுதியில் தஞ்சமடையலாம். மின் சாதனங்கள், கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் மற்றும் கிரில் அருகில் இருக்கக்கூடாது.
வீட்டுச் சுவா்களில் மழைநீா் கசிவு இருக்குமாயின் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிா்க்க வேண்டும்.
மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. இதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுகலாம்.
மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமா்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
மின் நுகா்வோா் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிா்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்.
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மனிதா்களுக்கும், வனவிலங்குகள் மற்றும் கால் நடைகளுக்கும் மின்விபத்தை ஏற்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்தடை தொடா்பான புகாா்களுக்கும், உதவிக்கும் ‘மின்னகம்’ மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்ோ.