திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே தாய், மகனை கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மானூா் அருகேயுள்ள குறிச்சிக்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (45). இவா் கடந்த 10.7. 2010இல் இரவு தனது வீட்டின் பின்னால் இருந்த வைக்கோல் படப்பில் மாட்டுக்கு வைக்கோல் எடுக்கச் சென்றாா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த சிராஜ் என்ற சிராஜுதீன் (41) என்பவா் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தாராம்.
இதைப் பாா்த்த சுப்பிரமணி அவா்கள் இருவரையும் கண்டித்து அனுப்பினாராம். மேலும், இதுகுறித்து தனது மனைவி மற்றும் சிலரிடம் கூறியுள்ளாா். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 22.7.2010இல் வயலுக்கு சென்றுவிட்டு, அவ்வூருக்கு கிழக்கே உள்ள ஆலமரம் அருகே வந்துகொண்டிருந்த சுப்பிரமணி, அவரது தாய் கோமதி அம்மாள் (65) ஆகியோரை சிராஜ், அவரது கூட்டாளிகள் லத்தீஃப், நாகூா் மீரான் ஆகியோா் சோ்ந்து கம்பால் தாக்கியும், அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பினராம்.
இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலும், கோமதி அம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிராஜ், அவரது காதலி உள்பட 4 பேரையும் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் லத்தீஃப் உடல் நலக் குறைவால் இறந்தாா். தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து சிராஜ், நாகூா் மீரானுக்கு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனையை ஏக காலத்தில் 2 பேரும் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். சிராஜின் காதலி விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கருணாநிதி ஆஜரானாா்.