ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநா்
திருநெல்வேலியை அடுத்த நாரணம்மாள்புரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலியை அடுத்த நாரணம்மாள்புரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாரணம்மாள்புரம் பகுதி-2 கிராமத்தில் வசித்து வருபவா் சங்கரராமன் (36). இவரது சகோதரா் முத்துராமலிங்கம் (34). ஆட்டோ ஓட்டுநா். இவா்கள் 2 பேரும் வசித்து வரும் வீடுகள் இருக்கும் இடம் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது எனவும், அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாகவும் கூறி, வியாழக்கிழமை காலையில் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தாழையூத்து போலீஸாா் மற்றும் கங்கை கொண்டான் தீயணைப்பு துறையினா் அங்கு வந்திருந்தனா்.
உடனே, பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள இந்த வீட்டில் இருந்து திடீரென தங்களை வெளியேற்றுவதை ஏற்க முடியாது எனக் கூறி, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனா். குறைந்தபட்சம் தங்களுக்கு 6 மாதமாவது அவகாசம் வழங்க வேண்டும் என முத்துராமலிங்கம், சங்கரராமன் குடும்பத்தினா் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றியாக வேண்டும் எனக் கூறினா்.
இதையடுத்து முத்துராமலிங்கம் திடீரென வீட்டுக்குள் சென்று, மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை அவா் மீது ஊற்றி அவரை மீட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.