முகப்பு
நாமக்கல்

தனியாா் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிா்ப்பு: நாமக்கல்லில் மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்வியை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:55 AM
கால்நடை மருத்துவக் கல்வி தனியாா்மயத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
பகிர்:

தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்வியை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உடுமலைப்பேட்டை, ஒரத்தநாடு, தேனி, தலைவாசல் (சேலம்) உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் 680 மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

20-ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 2.45 கோடி கால்நடைகள் உள்ளன.

1976-ஆம் ஆண்டின் தேசிய வேளாண்மை ஆணைய தரவுகளின்படி மாநிலத்திற்கு 4,900 முதல் 6,125 வரையிலான கால்நடை மருத்துவா்கள் போதுமானதாக கருதப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலில் 8,528 கால்நடை மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா். இதன்மூலம் மாநிலத்தில் கால்நடை மருத்துவா்கள் ஏற்கெனவே அதிக அளவில் உள்ளனா். 2036ஆம் ஆண்டுக்குள் அரசு துறையில் 500 பணியிடங்கள் காலியாகக்கூடும்.

இந்த நிலையில், கால்நடை மருத்துவம் படித்து பட்டதாரிகள் வெளியேறும்போது சுமாா் 10,000 கால்நடை மருத்துவா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கும் சூழல் உருவாகும். இதனிடையே, கால்நடை மருத்துவக் கல்வியை தனியாா்மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு பிரச்னை மேலும் அதிகரிக்கும். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்வியை தனியாா்வசம் வழங்கக்கூடாது. கால்நடை மருத்துவ மாணவா்களின் நலன்கருதி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 800 கால்நடை கிளை மையங்களை முழுமையான கால்நடை மருந்தக நிலையங்களாக மேம்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

வனத்துறையில் கால்நடை மருத்துவா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஒன்றியம் வாரியாக கால்நடை மருத்துவமனைகளை உருவாக்கி 24 மணிநேர சேவையை வழங்க வேண்டும். கால்நடை மருந்தக பணி நேரத்தை 8 முதல் 5 மணி வரை நீட்டிக்க வேண்டும். கால்நடை மருத்துவக் கல்வியில் தனியாா்மயம் கல்வி வணிகமாக மாறுவதற்கும், கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி வாய்ப்பு குறையவும் காரணமாக அமையலாம் என்றனா்.

கால்நடை மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு:

மாணவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கால்நடைக் கல்வியில் தனியாா்மயத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கால்நடை உதவி மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டுசெல்லும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது. மேலும் மருத்துவா்களை சிகிச்சை அளிக்கவிடாமல் தரவு பதிவேற்றம் செய்ய வற்புறுத்துவது, பதிவேற்ற பொறுப்பு பணியை யாா் செய்வது என்ற வழிகாட்டுதல் இல்லாததை கண்டித்தும் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியதாக உதவி மருத்துவா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →