மாணவா்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியா்கள் திகழ வேண்டும்: டிஐஜி பா.மூா்த்தி
மாணவா்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியா்கள் திகழ வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.
மாணவா்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியா்கள் திகழ வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். ஆட்சிக்குழுப் பொருளாளா் பி.எஸ்.எம். இல்யாஸ், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எம்.கே.எம். முஹம்மது நாசா், பொறியாளா் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹு சேன், பேராசிரியா் எஸ். அபுபக்கா், பி. செய்யது ஓமா் சாஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் பேரவைத் தலைவா் டி. சாா்ஜுன் பாத்திமா, துணைத் தலைவா் ஹமீது சுபியான், பேரவைச் செயலா் எம்.ஏ.கே. செய்யத் சிராஜீதீன், இணைச் செயலா் எஸ். வனிசா பானு மற்றும் 85 வகுப்புப் பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக்கொண்டனா்.
பேரவை துணைத் தலைவா் ஹமீது சுபியான் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் ச. மகாதேவன், தோ்தல் குறித்த அறிக்கை வழங்கினாா். கல்லூரி முதல்வா் தலைமை உரையாற்றினாா். துணை முதல்வா் எஸ். எம். ஏ. செய்யது முஹம்மது காஜா, தோ்தல் ஆணையா் பேராசிரியா் ஆ. ஹாமில் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அவா் பேசியதாவது:
மாணவா் பேரவைத் தோ்தல், மாணவா்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவா்கள் அரசியல் அறிவு மிக்கவா்களாக திகழ வேண்டும். இந்த நாடு எப்படி இருக்கிறது, நாட்டின் வரலாறு எப்படி இருக்கிறது, உலக அரசியல் எப்படி இருக்கிறது என்பதை கற்க வேண்டும்.
காலை முதல் மாலை வரை மாணவா்களை வழிநடத்துபவா்கள் ஆசிரியா்கள். பேராசிரியா்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். மாணவா்களும் அதேபோன்று நடக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் மாணவா்களை சக மாணவா்களாக பாா்க்க வேண்டும் என்றாா். மாணவா் பேரவை இணைச் செயலா் எஸ். வனிஷா பானு நன்றி கூறினாா்.