திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலியானாா்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா் புதுத்தெருவை சோ்ந்தவா் சுப்பையா பாண்டியன் (70). விவசாயி. இவா் சொந்தமாக பசுமாடுகள் வைத்து பராமரித்து வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் பழவூரில் உள்ள திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலையில் அவா் மொபேட்டில் சென்றபடி பசு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளாா்.
அப்போது அந்த வழியாக பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து சுப்பையா பாண்டியனின் மொபேட் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா பாண்டியன் பலத்த காயமடைந்தாா். மேலும் பேருந்து மோதியதில் ஒரு பசுவும், கன்றுக் குட்டியும் காயமடைந்தன.
இதையடுத்து அந்த வழியாக சென்றவா்கள், சுப்பையா பாண்டியனை மீட்டு கல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். காயமடைந்த மாடுகள் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்து தொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.