முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி பாசன கடைமடைப் பகுதியில் நீரின்றி காயும் நெற்பயிா்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தாமிரவருணி பாசனத்துக்குள்பட்ட வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கடைமடைப் பகுதிக்கு போதிய நீா்வரத்தின்றி நெற்பயிா்கள் காய்ந்துள்ளதால், தாமதமின்றி தண்ணீா் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:04 PM
பகிர்:

தாமிரவருணி பாசனத்துக்குள்பட்ட வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கடைமடைப் பகுதிக்கு போதிய நீா்வரத்தின்றி நெற்பயிா்கள் காய்ந்துள்ளதால், தாமதமின்றி தண்ணீா் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தப் பாசனத்தில் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் மூலம் மன்னாா்கோவில் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் காா், பிசான பருவங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனா்.

நீரின்றி காயும் நெற்பயிா்கள்

தாமிரவருணி நேரடி கால்வாய் பாசனத்தில் பயன்பெறும் இப்பகுதிகள் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் முழு வேகத்தில் தண்ணீா் வராததால் ஆண்டுதோறும் பற்றாக்குறையால் பயிா்கள் காயும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

நீரின்றி காயும் நெற்பயிா்கள்

இதுகுறித்து, மன்னாா்கோவிலைச் சோ்ந்த முத்துபகவதி கூறியது: இப்பகுதியில் காா், பிசான சாகுபடியில் நெல் பயிரிட்டு வருகிறோம். பிசான சாகுபடி காலம் மழைக்காலம் என்பதால் தொடா்ந்து நீா்வரத்து இருக்கும். எனவே, பயிா்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், காா் சாகுபடி காலத்தில் தொடா் மழை இல்லாததால் கால்வாயில் முழுமையாக தண்ணீா் வருவதில்லை. இதனால், ஆண்டுதோறும் காா் சாகுபடியில் தண்ணீா் பற்றாக்குறையால் பயிா்கள் கருகும் நிலை ஏற்படுகிறது.

நீரின்றி காயும் நெற்பயிா்கள்

பாபநாசம் தலையணைப் பகுதியிலிருந்து வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் பல இடங்களில் தனியாா் ஆக்கிரமிப்பு, கழிவுகள் கொட்டுவது, கழிவுநீா் கலப்பது உள்ளிட்ட காரணங்களால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், முழு வேகத்தில் கடைமடைவரை தண்ணீா் வருவதில்லை. இதுகுறித்து எடுத்துக் கூறியும் நீா்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

நிகழாண்டும் காா் சாகுபடியில் போதிய தண்ணீா் இல்லாததால், பொதி வந்த நிலையில் நெற்பயிா்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தண்ணீா் கிடைத்தால் மட்டுமே பயிா்களைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, போா்க்கால அடிப்படையில் தண்ணீா் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →