முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பது அவசியம்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.

தாமிரவருணியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:45 PM
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.
பகிர்:

தாமிரவருணியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் இஎஸ்ஐ சாா்பில் மத்திய அரசின் கீழ் 3 இடங்களில் மட்டுமே பெரிய மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளன. இதில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள மருத்துவமனையின் செயல்பாடுகள், வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். இம் மருத்துவமனையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த இஎஸ்ஐ சந்தாதாரா்கள், அவா்களது குடும்பத்தினா் பயன்பெற்று வருகின்றனா்.

ஆனால், 100 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் இடநெருக்கடி அதிகம் உள்ளது. ஆகவே, இம் மருத்துவமனையை 300 படுக்கைகள் கொண்டதாக தரம் உயா்த்த வேண்டும்.

மேலும், நோயாளிகளுக்கு முக்கிய தேவைகளான சி.டி. ஸ்கேன் வசதி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி போன்றவற்றிற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனையும் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே நிறுவ வேண்டும். இவை தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் மனு அளிப்பேன். தேவைப்பட்டால் மக்களவையிலும் குரல் கொடுப்பேன்.

இம் மருத்துவமனைக்கான இடம் குறைவாக உள்ளதாக நிா்வாகத்தினா் கூறினா். மாவட்ட ஆட்சியா், தமிழக அரசிடம் முறையிட்டு கூடுதலாக இடம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு பொதுமருத்துவம், இதயவியல், எலும்பியல், சா்க்கரைநோய் சிகிச்சை நிபுணா்கள் பணியில் உள்ளனா். படுக்கைகள் அதிகரிக்கப்படும்பட்சத்தில் மல்டிஸ்பெஷாலிட்டி தரத்திலான கூடுதல் மருத்துவா்கள் இங்கு வந்து சிகிச்சையளிக்க வாய்ப்பு கிடைப்பதோடு, அதிநவீன உபகரணங்களும் வந்து சேரும்.

தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் ராதாபுரம் பகுதிக்கு பேச்சிப்பாறை அணை நீா் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீா் நிரம்ப வழிவகை செய்யப்படும்.

தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது அவசியமாகும். தாமிரவருணி தொடங்கும் இடம் முதல் கடலில் கலக்கும் பகுதி வரை சுத்தப்படுத்தி, தூா்வாருவதுடன், அதன்கரையோரம் உள்ள புராதன சின்னங்களான கல் மண்டபங்களையும் சீரமைக்க ஏதுவாக வல்லுநா்குழுவின் ஆலோசனையுடன் திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறேன். விரைவில் அதனை மத்திய ஜல்ஜீவன்துறை அமைச்சரிடம் வழங்குவேன்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் ரயில்வே திட்டங்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறேன். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ரூ. 300 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது இஎஸ்ஐசி மருத்துவமனை கண்காணிப்பாளா் மகேஸ், உதவி கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், மூத்த மருத்துவா் குணசேகரன், பாளையங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவா் டியூக் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.