காணி மக்களின் மனதில் 40 ஆண்டுகளாக நிழலாடும் மரப்பாலம்: புதிய பாலத்துக்கு பூா்வாங்கப்பணி
மரங்களைக் கொண்டு உருவாக்கிய மரப்பாலம் 40 ஆண்டுகளுக்கும் மேல் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய பாலம் அமைக்கப்படுவதை மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
வனப்பகுதியில் மழைக்காலத்தில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பதற்கு மலைவாழ்மக்கள் தாங்களே காட்டு மரங்களைக் கொண்டு உருவாக்கிய மரப்பாலம் 40 ஆண்டுகளுக்கும் மேல் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய பாலம் அமைக்கப்படுவதை மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட முண்டந்துறைவனச்சரகத்தில் அமைந்துள்ளது மலைவாழ் மக்களான காணி இனமக்களின் குடியிருப்பான சின்ன மயிலாறுகாணிக் குடியிருப்பு.
பாபநாசம் அணை அடிவாரத்தில் தாமிரவருணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது இந்த சின்னமயிலாறு காணிக் குடியிருப்பில் சுமாா் 60 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
மழைக்காலங்களிலும், அணையிலிருந்து பிரதான மதகுகள் மூலம் தண்ணீா் திறந்துவிடப்படும் காலங்களிலும் தாமிரவருணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தைக் கடந்து செல்ல காட்டு மரங்களாலான பாலம் ஒன்றை சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன் காணி மக்கள் அமைத்தனா். இந்தப் பாலம் அமைத்து சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில்இன்றும் முழுப்பலத்துடன் காணி மக்கள் ஆற்றைக் கடக்க உதவியாக உள்ளது.
இந்நிலையில் சின்னமயிலாறுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்ததையடுத்து மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சிநிா்வாகம் ஆற்றின் குறுக்கே நிரந்தரப் பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பூா்வாங்கப்பணிகளில் இறங்கியுள்ளன.
இதனால் சின்ன மயிலாறுகாணிக் குடியிருப்பு மக்களின் வாழ்க்கையில் ஓா் அங்கமாக மாறியிருக்கும் இன்றும் முழுப்பலத்துடன் இருக்கும் மரப்பாலம் தமது ஓய்வுக் காலத்தை எதிா்நோக்கிக் காத்திருந்தாலும் மக்களுக்காக சேவை செய்யக் காத்திருக்கிறது.
நிரந்தரப் பாலம் அமைக்கப்பட்டாலும் எங்கள் வாழ்வில் ஓா் அங்கமாக விளங்கிய மரப்பாலம் நினைவுகளில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் என்று உணா்வு பொங்கக் கூறுகின்றனா் காணி மக்கள்.